பப்பாளி சாகுபடி!

0
6873

     ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ!!!

    பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

ஏக்கருக்கு அரை கிலோ விதை!

    பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைத்து, பிறகு, ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறினால் விதையும் தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும் 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும்.

15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!

    பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும், இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!

    6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

       பூ பூக்கும் நேரத்தில்தான் பப்பாளியில் ஆண், பெண் அடையாளம் காணமுடியும் கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுகிறார்கள். இதனால்அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது.7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல்கிடைக்கும்.13-ம் மாதத்தில் மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும், பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

நன்றி, மரியராஜ்

தொடர்புக்கு : 8904256076

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here