Skip to content

வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

ஊடு பயிராக துவரை சாகுபடி!

“நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை. நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும் செழிப்பாக வளர்ந்து பயன் தருகிறது” என்கிறார் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கசபாபதி. அவரிடம் பேசினோம்…

“மேட்டூரில் நீரும் இல்லை. இந்த வருடம் மழையும் இல்லை. குறுவை, சம்பா எல்லாமும் போச்சு. ஏதோ விளையாட்டாக இந்த துவரையை விதைச்சேன். அதுவும் ஊடுபயிராக. நானே ஆச்சர்யப்படும்வகையில் இப்போது வளர்ந்து பூ, காய்ன்னு கண்ணுக்கு நிறைவா இருக்கு” என்றார் புன்னகை பொங்க.

தொடர்ந்து பேசியவர், ”நிலத்தில் சவுக்கு போட்டேன். அதில் ஊடுபயிராக உளுந்தை விதைத்ததோடு, துவரையும் போடலாமேன்னு போட்டேன். துவரை விதைக்க பட்டமெல்லாம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒருகிலோ என்று மானாவாரி விதைப்புதான் செய்தேன். பின்னர் முளைப்பதற்கு மட்டுமே கொஞ்சம் தண்ணீர் விட்டேன். அதோடு சரி. அதன்பிறகு தண்ணீரே விடவில்லை. செடி வளர்ந்து மூன்று மாதம் கழித்து பூ பூக்கும்போது கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும். நான் அப்போதும் தண்ணீர் விடவில்லை. நான்காவது மாதத்தில் துவரைக்காய் கொத்துக்கொத்தாய் காய்க்கிறது. துவரைச்செடிக்கு மிகக்குறைவாக தண்ணீர் இருந்தாலே போதும். என்னுடைய வயல் இப்போது நீரில்லாமல் வெடிப்புடன் காணப்படுகிறது. ஆனால், துவரைச்செடிகள் பச்சைப் பசுமையாக இருக்கிறது. வருடத்திற்கு மூன்று சாகுபடி செய்யலாம். வீட்டுத்தோட்டத்தில்கூட இதனைக் கொஞ்சமாகப் பயிரிடலாம்.

ஆறு ஏக்கரில் ஊடுபயிராக மட்டுமே பயிரிட்டுள்ளேன். தற்போது துவரை காய்க்கத் தொடங்கியிருக்கிறது. நான்காவது மாத முடிவில் துவரைச்செடியை அறுவடை செய்துவிடலாம். ஆட்களைவிட்டு கதிரடித்தால் செலவு அதிகமாகும். அதனால் செடியை வெட்டி நன்கு காயவைத்து டிராக்டர் விட்டு அடித்தால் காய்கள் தனியே வந்துவிடும். நன்கு காய்ந்த செடியின் குச்சிகள் வேலிப்படல் தயாரிக்கவும் பயன்படும். இந்தப் படல் ஒரு வருடம் ஆனாலும் மக்காது. மீண்டும் விதைக்கவேண்டுமென்றால் நிலத்தை உழக்கூடத் தேவையில்லை. அப்படியே விதைப்பு செய்துவிடலாம். நான் கடந்தமுறை துவரைச்செடிக்கு பூச்சிமருந்து எதுவும் தெளிக்கவில்லை. அதனால் துவரைக்காயில் காய்ப்புழு என்பது லேசான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பூப்பருவத்தில் இயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் பஞ்சகவ்யம் தெளிப்பு செய்தால் காய்ப்புழுவின் பாதிப்பு இல்லாமல் அதிக மகசூல் கிடைக்கும். தற்போது இரண்டாவது முறை ஐப்பசி மாதம் மழைக்காலத்தில் துவரையை விதைத்தேன். இதுவரை துவரைச்செடிக்கு தண்ணீரே விடவில்லை. ஆனால் பூப்பூப்பதிலும், காய் காய்ப்பதிலும் எந்தக் குறையும் இல்லை. இதனால்தான் ‘துவரையை நம்பி ஊடுபயிராக பயிரிடலாம். தண்ணீர் பிரச்னை இல்லை. நாற்று, நடவு, களை, கூலி ஆட்கள் என்றபடி எந்தபிரச்னையும் இல்லை. மானாவாரி விதைப்பை நாமே செய்துவிடலாம். இதனால் செலவு நிறைய மிச்சம். அறுவடைக்கு மட்டுமே சொற்ப அளவில் கூலி ஆட்கள் இருந்தால் போதும்” என்று தன்னம்பிக்கையுடன் பலரிடமும் சொல்லி வருகிறேன்.

இதைவிட ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், நான் முதன்முதலில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 75 ரூபாய்க்கு கால் கிலோ விதை மட்டுமே வாங்கி ஒரு திடலில் விதைப்பு செய்தேன். அது நல்லபடியாக வளர்ந்து காய்த்து சுமார் 60 கிலோ அளவிற்கு துவரை கிடைத்தது. அந்த விதையைத்தான் மீண்டும் நான் இப்போது விதைத்துள்ளேன். அதோடு இந்தப் பருதியைச்சேர்ந்த விவசாயிகள் பலருக்கும் இலவசமாக கொடுத்து துவரை விதைக்கச்சொல்லியுள்ளேன். இப்போது ஆறு ஏக்கரில் ஊடுபயிராக மட்டுமே மானாவாரியாக விதைக்கப்பட்ட துவரை சுமார் 800 கிலோ அளவிற்கு மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு ஒரு கிலோ என்றால் ஆறு ஏக்கருக்கு ஆறு கிலோ விதைப்பு செய்தேன். இப்போது நான்கு மாதத்தில் 80,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்துவிடும் . முழுத் துவரம் பருப்பை அதற்காக அரவை மில்லில் கொடுத்து இரண்டாக உடைத்துக்கொள்ளலாம். சொந்த உபயோகத்திற்கென கொஞ்சமாக துவரை விதைத்து அறுவடை செய்பவர்கள் துவரையை முளை கட்டி வைத்துக்கொண்டு  அதனை ஆறு மாதம் கழித்துக்கூட உடைக்கலாம். துவரையிலேயே பலவகை உள்ளது. நாங்கள் இப்போது விதைத்துள்ளது கோவை துவரை. புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் துவரையும் நல்ல மகசூல் கொடுக்கும். 90,100,110,120,130 நாட்களில் காய்க்கும் தன்மை கொண்ட துவரைகளும்  உள்ளது. அதிக சிரமப்படாமல் நான்கே மாதத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். அதுவும் ஆடிப்பட்டத்தில் மானாவாரியாக விதைப்பு செய்துவிட்டால் அந்த சமயத்தில் பெய்யும் கோடைமழையே இதற்கான தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்துவிடும். ஒருமுறை விதைப்பு செய்துவிட்டு நாம் பாட்டுக்கு வேறுவேலை இருந்தால் பார்க்கலாம். அந்தளவிற்கு இதனைக் கவனிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், துவரைச்செடியை ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாப்பதுதான் மிகவும் சிரமமான விஷயம்.

துவரையை நம்பி ஊடுபயிராக பயிரிடலாம். தண்ணீர் பிரச்னை இல்லை.

   நாற்று, நடவு, களை, கூலி ஆட்கள் என்றபடி எந்த பிரச்னையும் இல்லை.

நெற்பயிரைச் சாகுபடி செய்பவர்கள் எல்லா வேலைகளுக்கும் கூலி கொடுத்தே கட்டுபடியாகவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரச்னை இந்த துவரைச்சாகுபடியில் இல்லை. ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் குறைந்தபட்சம் ஏழு அடி இடைவெளியே இருக்கவேண்டும். அப்போதுதான் செடி நன்கு பரந்து விரிந்து வளரும். டெல்டா மாவட்டத்தில் பல நிலங்கள் வறட்சி பூமியாக மாறி பொட்டால் காடாகிவருகிறது. இது பொட்டல் காட்டிற்கு ஏற்ற பயிர். நல்ல நிலமாக இருந்தால் அதில் உளுந்து பயிர் போட்டுக்கொள்ளலாம். துவரையை மானாவாரி விதைப்பு செய்து பத்து நாட்கள் கழித்து மழை பெய்தாலும் முளைத்துவிடும். குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஊடுபயிராக போடுவதால் இது நமக்கு தனி வருமானமாக அமைந்துவிடும். நெல்லை விதைத்துவிட்டு மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று புலம்புவதைக்காட்டிலும் காலத்திற்கு ஏற்றபடி அனைவரும் துவரைச் சாகுபடிக்கு மாறுவது சிறந்த பயனைக்கொடுக்கும். தற்போது துவரை வயலில் போட்டிருக்கும் சவுக்கும் சில ஆண்டுகளில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news