Skip to content

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்’. 500 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனம்.

நடையனூர் பகுதியில் எள், தேங்காய், நிலக்கடலை போன்றவற்றை அதிகமாக சாகுபடி செய்யும் விவசாயிகள் இருப்பதால், இந்நிறுவனம் மூலமாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் எம் சாமியப்பனைச் சந்தித்துப் பேசினோம்.

”விவசாயிங்க விளைபொருளை சந்தைப்படுத்துறதுல பல சிக்கல்களை சந்திக்கிறாங்க. அதையெல்லாம் தவிர்க்கணும்னுதான், இதுபோல உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் துவங்க அரசு ஊக்கம் கொடுக்குது. இதுமாதிரி கம்பெனி ஆரம்பிச்சா நிறைய சலுகைகளும் கிடைக்கிது. இந்த மாதிரி கம்பெனிகள்ல அந்தந்த சுற்று வட்டாரத்துல அதிகமா விளையுற விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்றாங்க. உதாரணமா, திண்டுக்கல் மாவட்டத்துல ‘ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கையில் விளைஞ்ச கொய்யா பழங்களையும் கொய்யா ஜீஸையும் தயாரிச்சு சந்தைப்படுத்துறாங்க,  கோயம்புத்தூர் மாவட்டத்துல, ‘வெள்ளியங்கிரி மலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்து அதை நேரடியா விற்பனை செய்றாங்க. இது மாதிரி நாங்களும் ஆரம்பிக்கலாம்னுதான், 2013-ம்  வருஷம் ‘நடையனூர் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி’யைத் துவக்கினோம்” நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட கதை சொன்ன சாமியப்பன் தொடர்ந்தார்.

”இந்த மாதிரி கம்பெனி ஆரம்பிக்கணும்னா குறைஞ்ச பட்சம் 500 விவசாயிகள் உறுப்பினரா இருக்கணும். ஆனா, அவ்வளவு சுலபமா அத்தனை பேரையும் சேர்க்க முடியலை. வீடு வீடா, காடு காடா அலைஞ்சு விவசாயிகளை சந்திச்சு உற்பத்தியாளர் கம்பெனி குறித்து விளக்கம் கொடுத்தோம். கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு புரிய வெச்சுதான் 500 உறுப்பினர்களைச் சேர்த்தோம் ஒவ்வொரு உறுப்பினரும் 5 ஆயிரம் ரூபாயை பங்குத்தொகையாக கட்டியிருக்காங்க.

எங்க  பகுதியில அதிகம் வெளையுற தேங்காய், எள், நிலக்கடலை மூணையும் எண்ணெயா மாத்தி விற்பனை செய்ய முடிவு செஞ்சோம். அதுக்காக விளைப்பொருளை காய வைக்கிறதுக்கு சிறு உலர் களம் அமைச்சோம். பக்கத்துலயே ரெண்டு மரச்செக்கு அமைச்சோம். எண்ணெய் எடுத்து பாட்டில்களில் அடைச்சு எங்க கம்பெனி அங்காடில விற்க ஆரம்பிச்சோம். புண்ணாக்கையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 10 லிட்டர் எண்ணெய்தான் விற்பனையாச்சு. எண்ணெய் தரம் நல்லா இருந்ததால வாய்வழி விளம்பரம் மூலமாவே பரவி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுச்சு. இப்போ,  ஒரு நாளைக்கு மூணு எண்ணெயும் சேர்த்து சராசாரியா 270 லிட்டர் அளவுக்கு விற்பனையாகுது.

அதோட, கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள், பயறு வகைகள், நாட்டுச்சர்க்கரை, தேன், நெல்லிக்காய்சாறு’ வெல்லம், கருப்பட்டினு வெளியூர் விவசாயிங்ககிட்ட இருந்து வாங்கியும் விற்பனை செஞ்சுட்டுருக்கோம். எங்க உருப்பினருங்க 500 பேருமே இங்கதான் தேவையான பொருட்களை வாங்குறாங்க. விவசாய இடுபொருட்களையும் இங்க விற்பனை செய்றோம்” என்ற சாமியப்பன் நிறைவாக,

“எங்க உறுப்பினர்களுக்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, மதிப்புக்கூட்டிய  பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சிகளும் கொடுக்கிறோம். விவசாயிகள் கொண்டு வர்ற பொருட்களை கட்டுபடியான விலை கொடுத்து கொள்முதல் செய்றோம். கம்பெனி வேலைகளுக்காக ஆறு நிரந்தர வேலையாளுங்க இருக்காங்க.இப்போ எங்க கம்பெனி வருமான வரி கட்டுற அளவுக்கு உசந்துருக்கு. அடுத்து எங்க பொருட்களை நாடு முழுக்க சந்தைப்படுத்தற முயற்சிகளை எடுத்துட்டுருக்கோம். அதோட கம்பெனி மூலமா ஒரு சமையல் எரிவாயு ஏஜன்ஸியையும், பெட்ரோல் பங்க்கையும் ஆரம்பிக்கப் போறோம். அதுக்கான வேலைகள் ஜரூரா நடந்துட்டுருக்கு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.

அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news