Skip to content

மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி?

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் உருண்டை மஞ்சள் ரகத்தைத் தவிர, மற்ற மஞ்சள் ரகத்தைத் தவிர,மற்ற மஞ்சள் ரகங்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கேற்ற ரகங்கள்தான். ‘எக்ஸ்ட்ரா போல்டு’ [முதல் தர மஞ்சள்],’மினி சேலம்’ [இரண்டாம் தரம்] மற்றும் ‘மீடியம் மஞ்சள்’ [மூன்றாம் தரம்] ஆகிய மூன்று வகைகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ளது.

மலேசியா,இலங்கை,நியூசிலாந்து, துபாய் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மஞ்சள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று வகையான மஞ்சள் ரகங்களில் முதல் தர மஞ்சளை மலேசியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற இரண்டு ரகங்களை மற்ற நாட்டவர்கள் அதிகம்  விரும்புகிறார்கள்.

அனைத்து ஏற்றுமதியாளர்களும் மஞ்சள் தரமானதாகவும் நீள்மானதாகவும், அதேசமயம் நல்ல தடிமனாகவும் நிறமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தூசி,கல்,மணல்,வண்டு மற்றும் குப்பைகள் மஞ்சளில் கலந்திருந்தால் ஏற்றுமதியாளர்கள் விரும்புவதில்லை. இதனால் மஞ்சளில் உள்ள தேவையற்ற பொருட்களை  நீக்கி மதிப்புக் கூட்டினால் கூடுதல் விலை கிடைக்கும்.

மண், ரகம், தட்பவெப்ப நிலை…

மஞ்சளில் ஈரோடு மஞ்சள் மற்றும் சேலம் மஞ்சள் ஆகியவை முக்கிய நாட்டு ரகங்கள். இதைத்தவிர, கோ 1 ,பவானிசாகர் -1,2[பி.எஸ்.ஆர்],ரோமா,ஸ்வெர்ணா,சுதர்ஷனா,ரங்கா, ராஷ்மி,ராஜேந்திர சோனியா,கிருஷ்ணா, சுகுணா,சுகந்தம்,சுரோமா,ஆலப்புழா விரலி மஞ்சள்,ஐ.ஐ.எஸ்.ஆர் பிரபா,ஐ.ஐ.எஸ்.ஆர் பீரதீபா, ஐ.ஐ.எஸ்.ஆர் அலப்பி, ஐ.ஐ.எஸ்.ஆர் கெடாரம் ஆகியவை வீரிய ரகங்கள்.

நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கை முறையில் விளைவித்த விதைக்கிழங்கைத் தேர்வு செய்வது நல்லது. விரலி மஞ்சள் அல்லது கிழங்கு [குண்டு] மஞ்சளை விதையாக பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600 முதல் 800 கிலோ விதை மஞ்சள் தேவை. மஞ்சள் வெப்ப மண்டலப்பயிர். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருமண்பாடு நிலம் மிகவும் உகந்தது. மஞ்சளுக்கு 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸீக்கு இடைப்பட்ட வெப்பநிலை தேவை.

மஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 1,500 மில்லி மீட்டர் மழை கிடைக்கும் பகுதிகளில் மஞ்சளை மானாவாரியாகப் பயிரிடலாம். தமிழ்நாட்டில் பயிரிட மே – ஜீன் மாதங்கள் ஏற்ற பருவம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj