Skip to content

விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்!

வித்வான் சிங் ஒரு காலத்தில் 50 ஏக்கர்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக சிறிது, சிறிதாக நிலத்தை விற்ற அவருக்கு இறுதியில் மிஞ்சியது 7.5 ஏக்கர் மட்டுமே. வித்வான் சிங்கிற்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். தனது பிள்ளைகள் தன்னை விட்டு தூரமாக சென்றுவிடக் கூடாது என்பதில் வித்வான் சிங்கின் மனைவி உறுதியாக இருந்ததால், வித்வான் சிங்கின் மகன் அமரால் 11-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.

ஒரு நாள் திடீரென வித்வான் சிங்கிற்கு கண் புரை நோய் ஏற்பட்டு, கண் பார்வை பறிபோனது. இதனைத் தொடர்ந்து குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்ட அமர், தனது தந்தையின் ஆலோசனைகளை கேட்டு, அந்த 7.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். துரதிஷ்டவசமாக ஒரு நாள் வித்வான் சிங்கும் மரணமடைந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயமும் கை கொடுக்கவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டும் தொழிலை அமர் செய்யத்துவங்கினார். அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, ஜீப் ஒன்றை வாங்கிய அமர், அதனைக் கொண்டு தனது தொழிலை தொடர்ந்து வந்தார். ஆனால் 1997-ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக அந்த ஜீப்பையும் விற்க நேர்ந்தது.

ஜீப்பை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது, அதற்குள் ஒரு துண்டுச் சீட்டு இருப்பதை அமர் பார்த்தார். அதனை எடுத்து படிக்கும் போது, நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து அச்சடிக்கப்பட்டிருந்தது. அதனை மிகவும் கவனமாக படித்த அமர், தனக்குள் ஒரு தெளிவு பிறந்ததை உணர்ந்தார்.

நெல்லிக்காய்தான் இனி தனது வாழ்க்கை என முடிவெடுத்த அமர், தனது நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிளம் பழ மரங்களை நட்டார். அவை காய்க்கத் துவங்கிய சமயத்தில் அங்கு வந்த விவசாய அதிகாரியிடம் கெஞ்சி, கூத்தாடி நெல்லிக்காய் மரம் வைப்பதற்கான ஆலோசனைகளையும், உதவியையும் அமர் பெற்றார்.

முதல் கட்டமாக 60 நெல்லிக்காய் கன்றுகளை நட்ட அமர், பின்னர் மேலும் 60 கன்றுகளை நட்டார். ஆனால் இந்த கன்றுகள் மரமாகி, பலன் கொடுக்க நீண்ட நாட்கள் ஆகின. ஆனாலும் அமர் பொறுமை காத்தார். பின்னர் காய்க்கத்துவங்கிய நெல்லிக்காய்களை சந்தைக்கு கொண்டு சென்றால், அதனை யாரும் வாங்கத் தயாராக இல்லை. தொழிற்சாலைகளும், நெல்லிக்காய் தரம் சரியில்லை என ஒதுக்கித் தள்ளின. அப்போது அந்த பகுதியில் இயங்கிய தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், “முரப்பா” எனப்படும் ஒரு உணவு வகையை தனது நெல்லிக்காய்களை கொண்டு அமர் செய்யத் துவங்கினார்.

அமரின் முரப்பா அனைவராலும் விரும்பப்பட்டதால், முதல் ஆண்டிலே கணிசமான வாடிக்கையாளர்களை அவர் பெற்றார். இரண்டாம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது. மூன்றாம் ஆண்டு சந்தையில் தனது முரப்பாவை விற்பனைக்கு கொண்டு சென்றார். ஏற்கனவே அமரின் முரப்பா குறித்து கேள்விப்பட்ட அவர்கள், உடனே அதனை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள நகரங்களிலும் அமரின் முரப்பா பிரபலமடைந்தது.

இன்று தனது கிராமத்தில் உள்ள பல பெண்களுக்கு அமர் தனது நிறுவனத்தில் வேலை அளித்துள்ளார். ஆண்டுதோறும் 200 முதல் 225 கிலோ நெல்லிக்காய்களை அவர் உற்பத்தி செய்கிறார். அம்ரிதா முரப்பா என சுற்றுவட்டாரத்தில் பிரபலமடைந்துள்ள அமரின் தயாரிப்பின் மூலம், ஆண்டுதோறும்  28 லட்ச ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மதிப்பு கூட்டுதல் எவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் என்பதற்கு, அமரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு..!

நன்றி:

http://www.thebetterindia.com/95268/amar-singh-amla-farmer-rajasthan/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj