Skip to content

பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, இந்திய விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை அதிக அளவில் ரூபாய் நோட்டுகளாகவே செய்து வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மகராஷ்டிரா, குஜராத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரவில்லை. இதன் காரணமாக பயிர்களுக்கான விதைகள் வாங்குவதற்கு கூட பணமில்லாமல், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த மாதம் காரிப் பருவத்தின் அறுவடை காலமாகவும், ரஃபி பருவத்திற்கான விதைத்தல் பணிக்கான காலமாகவும் உள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் முடிந்த பின்னர் இந்த இரு விவசாய பருவங்களும் ஒரு புள்ளியில் இணைவதால், இந்த மாதம் ’பரபரப்பான பயிர்க்காலம்’ என்றே அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் குறைந்ததால் இந்திய விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த சுணக்க நிலை, விளை பொருட்களின் விலையிலும் எதிரொலித்து வருகிறது. உற்பத்தி பொருட்களை விவசாய நிலத்திலிருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ஒருவேளை பல சிரமங்களுக்கு இடையே சந்தைகளுக்கு விளை பொருட்களை கொண்டு சென்றாலும், மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளதால் அவற்றை வாங்கவும் ஆளில்லை.

பணமதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால், விவசாய இடு பொருட்களான விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வாங்க முடியாமல் விதைப்புப் பணிகள் பெரும்பாலான பகுதிகளில் துவங்கப்படவில்லை. பொதுவாக கடன் வாங்கி விதைப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலான விவசாயிகளின் வழக்கமாக உள்ளது. இப்போது அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் கூட கையில் பணமில்லாமல் இருக்கின்றனர்.

இந்த சூழலினால் குளிர்கால பயிர்களான கோதுமை, கடுகு, சுண்டல் போன்றவற்றின் விலை எகிறியுள்ளது. ஏற்கனவே குறைந்த விளைச்சல் காரணமாக கோதுமை விலை அதிகரித்திருந்தது. இந்நிலையில் பணமதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால், கோதுமையின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை காரணமாக ரஃபி காலத்தில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்தால், அடுத்தாண்டு கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்படும்.

விவசாயக் கூலிகளின் நிலை இன்னும் மோசமாக மாறியுள்ளது. விவசாயக் கூலிகளுக்கு ஊதியம் அளிக்க பெரு நில விவசாயிகளிடம் பணம் இல்லாத நிலை உள்ளது. இதனால் ஏற்கனவே அன்றாடம் காய்ச்சியான விவசாய கூலிகள், வேலைவாய்ப்பின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வந்த பல விவசாயக் கூலிகள் தங்கள் சொந்த ஊர்களான பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரப்பர், சணல், ஏலக்காய், தேயிலை போன்ற தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்னும் ஊதியம் அளிக்கப்படவில்லை. நடுத்தர தேயிலை உற்பத்தி நிறுவனங்கள், சில வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளன. சணலை வாங்குவதற்கு வியாபாரிகளிடம் பணம் இல்லாததால், சணல் உற்பத்தி முடங்கிப் போயுள்ளது. பருத்தித் தொழில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக நாள்தோறும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் செடிகளில் பறிக்கப்படும் பருத்தி, தற்போது ஒரு நாளுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் செடிகளில் மட்டுமே பறிக்கப்படுகிறது. இதன் காரணமாக பருத்தியின் விலை 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்திய விவசாயத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி 61 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன. ஆனால் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவற்றில் விற்பனை 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

எப்போது இந்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து விவசாயத்துறை மீளும்? என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. இந்த நிலை மாறுவதற்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு 2 முதல் 3 மாதங்களும், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஆகியவை 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் நோட்டு மதிப்பு குறைக்கப்பட்டதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாது. எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்க முடியும் என்பதால், அடுத்த அறுவடை அல்லது அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இழப்பிலிருந்து ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் நஷ்டம் என்பது இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

நன்றி:http://www.livemint.com/Opinion/B1vFTOgwqHjdM5nkmg2CxJ/Demonetization-The-impact-on-agriculture.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj