Skip to content

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல்

மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம்

திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்

சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும்

அகத்தியிலை தின்னு மவர்க்கு

                            (அகத்தியர் குணபாடம்)

பொருள்

உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். நிறைய சாப்பிட்டால் வாயுப் பிரச்னை உருவாகும்.

அகத்திக் கீரையின் தன்மை

விஷநாசினி – Antidote

குளிர்ச்சி உண்டாக்கி – Refrigerant

மலமிளக்கி – Laxative

புழு அகற்றி – Vermifuge

அகத்திக் கீரை குளிர்ச்சி தரும் இயல்புடையது. உடலில் உள்ள அனைத்து விதமான ‘விஷங்களையும்’ முறிக்கக்கூடியது.

அகம் + தீ = அகத்தீ

அகத்தில் உள்ள தீயை (உஷ்ணம்) குறைக்கும் ‘அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஆனால், தினமும் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அரிப்புடன் கூடிய புண் மற்றும் வாயு அதிகமாகிவிடும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கீரையை குறைவாகச் சாப்பிட வேண்டும். விஷங்களை மட்டுமல்லாமல், மருந்துகளையும் முறிக்கும் குணம் உள்ள அகத்திக் கீரையை, மருந்து எடுத்துக்கொள்ளும் காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

அகத்திக் கீரையின் மருத்துவப் பயன்கள்

  1. அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.
  2. அகத்திக்கீரைச் சாற்றில் (200 மி.லி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மி.லி) சேர்த்து, நன்கு கொதிக்கவைத்து தைல பதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 5 மி.லி (1 ஸ்பூன்) அளவுக்குச் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.
  3. அகத்திக் கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
  4. அகத்திக் கீரைச் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும்.
  5. அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
  6. அகத்திக் கீரை, ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நல்லெண்ணெய்யில் வடை சுடுவதுபோல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெய்யைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj