Skip to content

இயற்கையின் இயற்கை சங்கிலி!

எந்தவொரு நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வனவளம் முக்கியமாகும். வனவளம் அழிந்து விட்டால் மனித இனமும் விலங்கினமும் நாளடைவில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். பருவ மழை தவறாது பெய்யவும், நிலப்பரப்பின் தட்பவெப்பநிலைகளைச் சீராக வைத்திருக்கவும், பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மண் அரிப்பைத் தடுக்கவும், மானாவரி நிலங்களில் பசுமைச் சோலைகளை அமைக்கவும் வேளாண் காடுகள் இன்றியமையாததாகும்.

இன்றைய விதையே நாளைய மரம்; நாளைய மரமே வருங்கால மனித குலத்தின் காப்பாளன். ஆகவே மரம் வளர்ப்பது சுற்றுப்புறச் சூழல் காக்க மட்டுமின்றி, மனித குலத்தின் பல்வேறு தேவைகளான உணவு, மரம், பசுந்தாள் உரங்கள், உயிர் சார்ந்த பூச்சிக்கொல்லிகள், கால்நடைத் தீவனங்கள், எரிபொருட்கள் மற்றும் மூலிகை மருந்துகள் போன்றவற்றையும் பூர்த்தி செய்யும்படி இருக்கிறது.

ஒரு மரம் நமக்குக் குறைந்தது 12 வழிகலில் உதவி செய்கிறது. அவை வருமாறு: பிராண் வாயு, உணவு, உறைவிடம், நிழல், உடை, எரிபொருள், பசுந்தாள் உரம், பசுந்தீவனம், மழை, மண் பாதுகாப்பு மற்றும் மூலிகை மருந்துகள். எனவே விவசாயப் பெருமக்கள் வேளாண் காடுகளை வளர்த்து பசுமையான பாரதம் அமைக்கப் பாடுபட வேண்டும். இந்திய நாடு 64.01 மில்லியன் எக்டர் பரப்பளவுக்கு வனவளத்தைக் கொண்டுள்ளது. வனப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 13 மில்லியன் எக்டர் ஆகும். 2.2 மில்லியன் எக்டர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. இதில் 2.2 அடர்ந்த காடுகள் 1.08 மில்லியன் எக்டரிலும் அடர்த்தி குறைந்த, திறந்த காடுகள் 0.79 மில்லியன் எக்டரிலும் பரந்துள்ளன.

இன்றைய நிலையில் வேளாண்மையை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் பெரும்பாலான விவசாயிகளின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது. அவ்வப்போது பொய்த்துவிடும் பருவமழையும், அவ்வாறே பெய்தாலும் வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே பயிர் செய்யும் நிலையுமே இதற்குக் காரணம். இதுதவிர, நாட்டில் பரந்து விரிந்துள்ள தரிசு நிலங்களுக்கேற்ற ஒரு வேளாண் உத்தியைக் கையாள வேண்டிய நிலையிலும் அழிந்து வரும் காடுகளின் நிலையிலிருந்து மீளவும் மரம் வளர்ப்பு அவசியமானதாகிறது. இதில் வேளாண் காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேளாண் காடுகள் என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மரப்பயிர்களுடன் வேளாண் பயிர்களையோ அல்லது கால்நடைகளையோ அல்லது இரண்டையும் சேர்த்துப் பராமரிப்பது ஆகும். இதன்மூலம் அதிக விளைச்சலும் தொடர் மற்றும் நம்பிக்கையான வருமானமும் கிடைக்கிறது.

மரங்களைப் பல வரிசைகளில் காற்றடிக்கும் திசைக்குக் குறுக்காக அமைத்து, காற்றின் வேகத்தைக் குறைத்துக் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பையும், பாதிப்பையும் தடுக்க அமைப்பதுதான் மர அரண் ஆகும். மர அரணுக்காக நடப்படும் மரங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதுடன், கால்நடைகளின் தீவனத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஆனால் இவற்றுக்காக இந்த மரங்களை வெட்டாமல் கிளைக்கழிப்பு மூலம் கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தினால் அரண்கள் நீண்டகால பயன்தரும்.

நமது நாட்டில் கால்நடைகளின் தீவனத்தேவையையும், அதன் உற்பத்தியின் அளவையும் பார்க்கும் போது மிக அதிக இடைவெளி காணப்படுகிறது. இந்த நிலையில் நாம் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பை அதிகரிக்க முடியாது. இந்தச் சூழலில் நாம் நிலப்பரப்பை அதிகரிக்காமல் உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்ய முடியாத நிலத்தில் மரம் சார்ந்த புல் மற்றும் இதர தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் கால்நடைகளின் தீவனத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj